கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இந்த நாட்டிலிருந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு நான் முடிவுகட்டினேன். அத்தகைய ஆட்சிக்கு இந்த நாட்டில் மீண்டும் இடம் கிடையாது என திட்டவட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முகமூடியைப் போட்டுக்கொண்டு மக்களுக்கு அழகானதொரு உலகைக் காட்டி மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு சிலர் மேற்கொண்டுவரும் சதித்திட்டங்கள் குறித்து இன்று நாட்டு மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசு தோல்வியடைந்த ஓர் அரசு என சுட்டிக்காட்டி, அபிவிருத்தி குறித்து போலியான விம்பங்களை ஏற்படுத்தி வருகின்றவர்கள் அன்று அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொண்ட அனைத்து ஊழல், மோசடிகளையும் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த அரசு தயாராகவுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் எந்தவொரு அரச நிறுவனமும் கடமையில் இல்லாத தினத்தில் ஜின், நில்வளா கங்கைத் திட்டத்துக்கு கோடிக்கணக்கில் காசோலைகளை வெளியிட்டமை குறித்த கூற்றுக்கு சவால்விட்டு, மோசடி இடம்பெற்றிருக்குமானால் அதனை தெளிவுபடுத்துவதாகக் குறிப்பிட்டபோதும் அந்த மோசடி தொடர்பான விடயங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றி மக்கள் விரைவில் தெரிந்துகொள்ள முடியும்.
எந்தவிதமான சாத்தியவள ஆய்வுமின்றி அரசியல் தீர்மானங்களின்படி மோசடியாக ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா திட்டம் நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகள் சாதாரணமானவையல்ல.
அது தொடர்பான சரியான தகவல்கள் தற்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது.
இந்த நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சித்துவரும் அதிகாரவெறி பிடித்த அரசியல் சூழ்ச்சியைத் தோல்வியடையச் செய்வதற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவன்றி நாட்டையும் மக்களையும் வறுமையிலிருந்து விடுவிப்பதற்கும், கடந்த அரசு விட்டுச்சென்ற கோடிக்கணக்கான கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கும், நாட்டை அபிவிருத்திசெய்வதற்கும் அனைவரும் ஒன்றுபடவேண்டும்.
ஊடகங்கள் இன்று சுதந்திரமாக அரசை விமர்சிப்பதற்கும், விரும்பியவர்கள் சுதந்திரமாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும் சுதந்திரத்தை வழங்கக்கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
வடமேல் மாகாணத்துக்குத் தேவையான நீர் தொடர்பில் கடந்த சில தசாப்தகாலமாக அரசியல் மேடைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேசி வந்தபோதும் இதற்கான தீர்வு தற்போதைய அரசு ஆரம்பித்த மொரகஹகந்த திட்டத்தின் மூலமே கிடைத்திருக்கின்றது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் விளைவாக நடைமுறைப்படுத்தப்படும் வயம்ப கால்வாய் திட்டத்தின் மூலம் குருநாகல் மாவட்டத்தில் சுமார் 300இற்கும் மேற்பட்ட குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றன.
இதன் மூலம் மாவட்டத்தின் விவசாய மற்றும் நீர்ப்பாசனத்துறையிலும் விவசாய சமூகத்தின் வாழ்க்கையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.