எமக்குரிய 30 கோடியை வழங்காவிட்டால் கற்பித்தல் பணிகளைப் புறக்கணிப்போம் – தமிழ் ஆசிரியர் சங்கம்!

320 0

வட மாகாணத்தில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை 30 கோடி ரூபாவை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருமாறு வடமாகாண ஆளுநரிடம் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையான ரூபா30 கோடி (300மில்லியன்) நிதியை மத்திய அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை. எந்தெந்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எவ்வளவு நிலுவைகள் வழங்கப்படவேண்டும் என்ற விபரத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கப்பெறாததால் மத்திய அரசிடம் நிதியை வழங்கக் கோரி வடக்கு மாகாண ஆளுநரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

30கோடி நிதி என்பது சாதாரண தொகை அல்ல ஒவ்வொரு அதிபரும், ஆசிரியரும் தமது கடமைகளைச் செய்தபின்னர் வழங்கப்படவேண்டிய சம்பள நிலுவைகள் இதுவரை வழங்கப்படாததால் பலர் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியள்ளது. பலர் கடன்சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால் வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசிடம் இருந்து 30கோடி நிதியை விரைவாக விடுவித்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இதுவரை காலமும் எமது குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பொறுத்திருந்த நாம் இனிமேலும் பொறுக்கமுடியாத அளவுக்கு சுமைகளைச் சுமக்கின்றோம். எமக்கான நிலுவைகள் விரைவில் வழங்கப்படவேண்டும். இல்லையேல் கற்பித்தல் பணிகளைப் புறக்கணிக்கப்போதாக ஆளுநரிடம் சங்கம் எடுத்துரைத்துள்ளது.

Leave a comment