வடமாகாண சபையின் ஒரு நாள் அமர்வுக்காக 5 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நேற்று 98ஆவது அமர்வு காலை 9.45 மணியளவில் ஆரம்பமாகியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி அரை மணித்தியாலங்களுக்குள் சபை நடவடிக்கைகள் முடிவுறுவதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.அதன் பின்னர் 45 நிமிடங்களாக கடந்த 21ஆம் நாள் நடைபெற்ற அமர்வு தொடர்பாக உறுப்பினர்கள் தமக்குள் விவாதம் நடத்தினர்.
இதற்கிடையில் வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை எழுந்து தான் ஒரு கதை சொல்லப்போவதாக கூறினார். இதன்போது சபையில் பலத்த சிரிப்பொலி எழுப்பப்பட்டதன் பின்னர் அவர் கதை சொல்ல ஆரம்பித்தார்.முக்காலமும் அறிந்த முனிவரிடம் கையினுள் புறா ஒன்றனைக் கொண்டு ஒருவன் சென்றுள்ளான். முனிவரே நீங்கள் முக்காலமும் அறிந்தவர். நான் கையினுள் பொத்தி வைத்திருக்கும் புறா உயிரோடு உள்ளதா? இல்லாவிடில் இறந்து விட்டதா எனக் கேட்டான்?
புறா உயிருடனிருப்பதை அவதானித்த முனிவர் அவனது கை கட்டைவிரல் புறாவின் தலையை அழுத்திக்கொண்டிருப்பதையும் அவதானித்தார்.
புறா உயிருடன் உள்ளது எனக் கூறினால் உயிருடன் இருக்கும் புறாவை அவன் கைவிரலால் அழுத்தி கொன்றுவிடுவான். புறா இறந்துவிட்டது எனக் கூறினால் உயிருடன் உள்ள புறாவை பறக்கவிட்டுவிடுவான் என யோசித்த முனிவர் எல்லாம் உன் கையில் தான் உள்ளது என்று முனிவர் கூறினார். என்றார் பசுபதிப்பிள்ளை.
பசுபதிப்பிள்ளை சென்ன கதையைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட சயந்தன் எழுந்து நல்ல கதை சொன்ன நந்தவனத்து ஆண்டிக்கு நன்றி என்றார்.இதன்பின்னர் அனைவரும் தேனீர் அருந்திவிட்டு சபை கலைந்து சென்றுவிட்டது. வடமாகாணசபையின் இச்செயற்பாடானது மக்களை அதிருப்தியடையச்செய்துள்ளது.