கதிராமங்கலத்தில் பல மாதங்களாக எண்ணெய் கசிவு!

346 0

கதிராமங்கலத்தில் தற்போது ஏற்பட்ட கசிவு ஓரிரு நாளில் ஏற்பட்டது அல்ல பல மாதங்களாக ஏற்பட்டுள்ளது என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள இடத்தின் உரிமையாளர் ஸ்ரீராம் கூறினார்.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள நிலத்தின் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை.இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள இடத்தின் உரிமையாளர் ஸ்ரீராம் நிருபர்களிடம் கூறியதாவது:-

2002-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எனது இடத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. ஆனால் நான் கொடுக்க மறுத்தேன். அப்போது அவர்கள் நீங்கள் வழக்கு தொடுத்தாலும் எங்களுக்குத்தான் சாதகமாக வரும் என கூறி குத்தகைக்கு எடுத்தது. அதில் 2004-ம் ஆண்டு ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது நிலத்தின் தன்மை, நீரின் தன்மை பாதிக்கப்படும் என்று தெரியாது.

குத்தகை எத்தனை ஆண்டுகளுக்கு என்பதும் தெரியாது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பார்கள். அதுவும் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒப்பந்தமும் புதுப்பிக்கவில்லை. இதனால் எங்கள் நிலத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படையுங்கள் என்று நிலத்தின் உரிமையாளர்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் கேட்டோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

தற்போது எண்ணெய் படலம் படர்ந்துள்ள பகுதியில் உள்ள பயிர்கள் கருகிவிட்டன. இந்த பகுதியில் உள்ள வாய்க்கால் மூலம் 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனத்துக்கு தண்ணீர் செல்லும். தற்போது எண்ணெய் வாய்க்கால் தண்ணீர் மூலம் மற்ற நிலங்களுக்கு செல்லும் போது அந்த நிலங்களும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே தற்போது படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றுமாறு கேட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஏற்பட்ட கசிவு ஓரிரு நாளில் ஏற்பட்டது அல்ல. பல மாதங்களாக ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அதனை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர். நாங்கள் ஏதாவது கேட்டால் அவர்கள் இழப்பீடு குறித்து தான் பேசுகிறார்கள். ஓ.என்.ஜி.சி பதித்துள்ள குழாய்கள் எந்த வழியாக செல்கிறது என்று யாருக்கும் தெரியாது.

நாங்கள் கேட்பது நிலங்களில் எண்ணெய் படலம் படர்ந்துள்ளதை சுத்தம் செய்ய என்ன வழிமுறை, அதற்கு காலஅவகாசம் என்ன? என தெரிவியுங்கள் என கேட்டும் பதில் இல்லை. இதனால் அருகில் உள்ள நிலங்களுக்கு வேலை பார்க்க கூட யாரும் வருவது இல்லை. ஆபத்து ஏற்பட்டுவிடும் என அஞ்சுகிறார்கள். எனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பதித்துள்ள குழாய்களை அகற்றி விட்டு எங்கள் நிலத்தை மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment