பான்பராக், குட்கா விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த மூலக்கரையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட 23 மாவட்டங்களைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க. வில் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிய ஜனதா கட்சியால் மட்டும்தான் தமிழகத்தில் முன்னேற்றம் ஏற்படும். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளை நம்பி ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேவேந்திரகுல சமூகத்தினர் கட்சியில் இணைந்துள்ளனர். பிரதமர், சமுதாய தலைவர்களிடம் காட்டிய அன்பு, பரிவால்தான் தற்போது தேவேந்திரகுல மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்துள்ளனர்.
பான்பராக், குட்கா விஷயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு மனிதாபிமானம் காட்ட வேண்டும். மீனவர்கள் விரும்பி எல்லையை தாண்டுவது கிடையாது. காற்றின் வேகம் மற்றும் காலத்தின் சூழலால் எல்லை தாண்ட வேண்டியநிலை ஏற்படுகிறது. அதற்காக மீனவர்களை கொடுமைப்படுத்துவது, சட்டப்படி தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை மீனவர்களும் இந்திய எல்லையில் கரை ஒதுங்குகின்றனர். இலங்கை 20 கோடி அபராதம் போட்டால், இந்தியா 40 கோடி அபராதம் போடுவது போல் இருக்கக்கூடாது . மீனவர்கள் பாமரர்கள். இந்திய மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட பிரதமர் திட்டம் தீட்டியுள்ளார்.
3 ஆண்டுகளில் மீனவர்கள் விவகாரம் சரிசெய்யப்படும். மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன் பிடிக்க பயிற்சி அளிக்கவும், படகுகள் வாங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் துணை நிலை ஆளுனரால் குழப்பம் இல்லை. ஒரு மாநிலம் ஊழல் இல்லாமல் செல்ல துணைநிலை ஆளுனர் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளார்.
அதனை அங்குள்ள காங்கிரஸ் அரசால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உதாரணத்திற்கு புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் துணை நிலை ஆளுநர் தலையிடவில்லை என்றால் 71 மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு விலை போயிருக்கும்.
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு உறுதியான வெற்றி வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.