மனிதனின் யாத்திரையும் மிருகத்தின் யாத்திரையும் – புகழேந்தி தங்கராஜ்

494 0

mahinda-padayathra15பேராதனையில் சென்ற 28ம் தேதி தொடங்கிய மகிந்த ராஜபக்சவின் பாத யாத்திரை ஆகஸ்ட் 1ம் தேதி கொழும்பு வந்து சேர்ந்தது. 5 நாட்கள் 100 மைல்கள். மகாத்மா காந்தியால்தான் பாதயாத்திரை மேற்கொள்ள முடியும் என்று நினைக்கிறீர்களா? மகிந்த மிருகத்தாலும் முடியும்.

(யாரை யாரோடு ஒப்பிடுவது – என்று கோபப்படாதீர்கள். மகிந்த ராஜபக்சவுக்கு ‘பாரத்ரத்னா’ விருது கொடுக்க சிபாரிசு செய்யும் சு.சுவாமி போன்றவர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியும்.)

மகாத்மா காந்தியின் பாத யாத்திரையும் மகிந்தனின் யாத்திரையும் முற்றிலும் முரணான நோக்கங்களைக் கொண்டவை. அந்த மனிதனின் யாத்திரை பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான யாத்திரை. இந்த மிருகத்தின் யாத்திரை பறிக்கப்பட்ட பதவியை மீட்பதற்காகவும் சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் நடத்தப் பட்டிருக்கிற யாத்திரை.

மதவெறியால் நடந்த படுகொலைகளையும் பாலியல் வன்முறைகளையும் தடுக்க மவுண்ட் பேட்டனின் ராணுவத்தாலும் பாதுகாப்புப் படைகளாலும் முடியாது போன நிலையில் ‘தனி மனித ராணுவமாக’ நவகாளி நோக்கி காந்தி போகவேண்டியிருந்தது.

காந்தியின் யாத்திரைக்கும் ராஜபக்சவின் கேலிக்கூத்துக்கும் இடையிலான வேறுபாட்டை இலங்கை அமைச்சர் (மாஜி நடிகர்) ரஞ்சன் ராமநாயகவின் வார்த்தைகள் விளக்குகின்றன. “கொலைகாரர்களும் பாலியல் வன்முறையில் தொடர்புடையவர்களும் பாதயாத்திரை நடத்துவதைப் பார்த்து அப்பாவி மக்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்” என்பது ரஞ்சனின் வாக்குமூலம்.

மகிந்தனின் கைத்தடிகள் ரஞ்சனின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறார்கள். “ராஜபக்சவின் பாதயாத்திரையைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சி நடுங்குவது மைத்திரியும் ரணிலும் தான்” என்கிறார்கள் அவர்கள். கூடவே ‘மகிந்தரின் கொழும்பு உரை ரணில் – மைத்திரியின் அடிவயிற்றைப் பிசைகிறது’ என்று டிவிட்டர் தட்டுகிறார்கள்.

உண்மையாகப் பார்த்தால் கொழும்பு நகரில் நடந்த பாதயாத்திரை நிறைவுக்கூட்டத்தில் மகிந்த மிருகம் பேசியிருப்பது ‘தமிழினத்துக்கு நீதி வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் வேறுவேலை’ என்றெல்லாம் நாடகமாடும் சர்வதேசத்தின் அடிவயிற்றைத்தான் கூடுதலாகப் பிசையவேண்டும். ‘உனக்குப் பட்டுக் கைக்குட்டை தைத்துத் தருகிறோம்’ என்று வஜனம் பேசிவிட்டு ஈழத் தமிழரின் இடுப்புத் துணியையும் உருவப் பார்க்கிற அசகாய சூரர்கள் அவர்கள் தான்!

கொழும்புக் கூட்டத்தில் மகிந்தன் என்ன பேசினான் என்பதை வீரகேசரி விரிவான செய்தி ஆக்கியிருக்கிறது. ‘நாங்கள் மீண்டும் வருவோம்….. விட்டுச் செல்வதற்காக அல்ல… எடுத்துச் செல்வதற்காக….’ என்று மகிந்தன் சொன்னதையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறது.

“நாங்கள் தயார்…. நீங்கள் தயாரென்றால் நாங்கள் மீண்டும் வரத் தயார்! நீங்கள் கேட்பது எதுவோ அதைப் பெற்றுக் கொடுப்போம்” என்று மகிந்தன் பேசியிருப்பது இலங்கை ராணுவத்துக்கு அந்த மிருகம் கொடுத்திருக்கிற மறைமுக சிக்னல். சர்வதேச ஜடங்கள் ராணுவப் புரட்சியைத் தூண்டிவிட மகிந்தன் முயல்வதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரிக்கவும் தண்டிக்கவும் சர்வதேசத்தின் பங்களிப்புடன் கூடிய விசாரணையை நடத்த ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஒப்புக்கொண்டு ஓராண்டு ஆகிறது. இன்றுவரை அதற்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கி வைக்காதது மட்டுமின்றி “சர்வதேச நீதிபதிகள் – என்கிற பேச்சுக்கே இடமில்லை” என்று மூச்சுக்கு மூச்சு பேசுகிறார்கள் மைத்திரியும் ரணிலும்!

நாசமாய்ப் போன சர்வதேசம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மகிந்தனின் கொழும்பு உரையைக் கேட்ட பிறகாவது சர்வதேச ஜடங்கள் கோமாவிலிருந்து மீண்டு எழ வேண்டும்.

“நாட்டைக் காக்கப் போராடிய ராணுவ வீரர்கள் வாய்க்கால்களைச் சுத்தம் செய்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இன்றைய ஆட்சி ராணுவ வீரர்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்திருக்கிறது” என்று மகிந்தன் நீலிக்கண்ணீர் வடித்திருப்பது முள்ளிவாய்க்காலில் எம் இனத்தைச் சுத்திகரித்த ராணுவப் பொறுக்கிகளுக்குக் கொம்பு சீவுகிற வேலை.

“நாட்டை மீட்ட ராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று கொழும்பில் மகிந்தன் பேசிய அதே நாளில் சர்வதேச அமைப்பான ர்சுறு HRW (Human Rights Watch) மனசாட்சியுடன் பேசியிருக்கிறது.

“சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையில் நீதி கிடைக்க வாய்ப்பேயில்லை” என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் ர்சுறு HRW சட்டவியல் மற்றும் கொள்கை வகுப்பு இயக்குநர் ஜேம்ஸ் ராஸ். பத்தாண்டுகளுக்கு முன் மூதூரில் சேவை அமைப்பு ஒன்றின் 17 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் ராஸ்.

மூதூர்ப் படுகொலைகள் நடந்து சரியாக 10 ஆண்டுகள் ஆகிறது இப்போது! திருகோணமலை மாவட்டம் மூதூரில் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரீசைத் தலைமையகமாகக் கொண்ட ‘பட்டினிக்கு எதிரான நடவடிக்கைக் குழு’ என்கிற சேவை அமைப்பு மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வந்தது. ACTION FAIM என்பது அதன் பிரெஞ்சுப் பெயர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மூதூரில் கால்பதித்த சேவை அமைப்பு அது.

2006 ஆகஸ்ட் 5ம் தேதி ராணுவத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த அதன் ஊழியர்கள் 17 பேர் அதன் அலுவலகத்துக்குள்ளேயே ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அவர்கள் 17 பேரும் அந்த சேவை நிறுவனத்தின் சீருடையில் இருந்தனர். அவர்களில் 16 பேர் தமிழர்கள். 4 பேர் பெண்கள். ஒருவர் இஸ்லாமியர். ஒரே ஒருவரைத் தவிர மற்ற 16 பேரும் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.

கொல்லப்பட்டவர்களை சத்தம் போடாமல் குழிதோண்டிப் புதைத்துவிட்டுத்தான் அங்கிருந்து போனது ராணுவம். அந்த உடல்களைத் தோண்டியெடுத்துப் பரிசோதித்தபோது ஒவ்வொருவரது உடலிலும் குறைந்தது 20 குண்டுகள் பாய்ந்திருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சேவை நிறுவன ஊழியர்களுக்கு இலங்கை ராணுவ மிருகங்கள் ஈவிரக்கமில்லாமல் மரணத்தைப் பரிசளித்திருந்த லட்சணம் இது.

சாட்சியங்கள் மூலம் அது இலங்கை ராணுவம் நடத்திய கொலை வெறியாட்டம் என்பது சர்வநிச்சயமாகத் தெரிந்தபிறகும் இன்றுவரை மூதூர்ப் படுகொலைகள் விசாரணையை இழுத்தடிக்கிறது இலங்கை அரசு. இதைத்தான் ராஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“மூதூர்ப் படுகொலை விசாரணையை வேண்டுமென்றே இழுத்தடிப்பது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்பதையே காட்டுகிறது. ஜெனிவாவில் சென்ற ஆண்டு கொடுத்த வாக்குறுதியை இலங்கை காப்பாற்ற வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய TRIBUNAL அமைக்கப்பட்டு அதன்மூலம் விசாரணை நடந்தால் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்கிற ராஸின் அறிக்கை ஓராண்டுக்கு முன் முதல்வர் விக்னேஸ்வரன் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை எதிரொலிக்கிறது.

கொழும்பில் ராஜபக்ச வீரா-‘வேஷமாக’ப் பேசிய அதே நாளில் ராஸ் உண்மையைப் பேசியிருக்கிறார். ‘சர்வதேச நீதிமன்றத்தில் ராணுவத்தினரை நிறுத்த அனுமதிக்க மாட்டேன்’ என்று மகிந்தன் சொல்ல ‘சர்வதேச நீதிபதிகள் இல்லாமல் நியாயம் கிடைக்காது’ என்கிறார் ராஸ்.

ராஸ் சொல்லியிருப்பதிலுள்ள நியாயத்தையும் விக்னேஸ்வரன் தெரிவித்த TRIBUNAL என்கிற அறிவார்ந்த யோசனையையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீதியைக் குழிதோண்டிப் புதைக்க இலங்கை அரசு முயலுகிற இந்த நேரத்தில் நீதிக்கான குரலை வலுப்படுத்துகிற விதத்தில் விக்னேஸ்வரனும் ஜெயலலிதாவும் சந்தித்துப் பேசினால் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான புதிய பாதை ஒன்று அமையக்கூடும்.

தமிழினத்தின் இரண்டு முதல்வர்களும் சந்திப்பது இந்தக் கட்டத்தில் மிகவும் அவசியம். விக்னேஸ்வரன் ஏற்கெனவே ஜெயலலிதாவைச் சந்திக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். தமிழக முதல்வர் என்ன செய்யப் போகிறார்?