கீழ்த்தரமான அரசியல் சதி ஊடாக ஒருபோதும் வெற்றிபெற முடியாது

227 0

இன்று போல் நாளையும் நாட்டுக்கு தேவையான செயற்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் முறையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கீழ்த்தரமான அரசியல் சதி ஊடாக அந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெற முடியாதென்பதுடன், ஆட்சியிலுள்ளபோது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தையும், அரச சொத்துக்களையும் கொள்ளையடித்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றம் புரிந்தோர் மீண்டும் ஆட்சிக்கு வருவதாக மக்களுக்கு காட்ட முயற்சிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற அனைவருக்கும் நிழல் ‘விருசுமித்துறு’ படைவீரர் வீட்டு உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நடவடிக்கையின்போது உயிர்த்தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற முப்படை, பொலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர் குடும்பங்களின் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் 3.650 வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவின் நெறிப்படுத்தலில் அமுல்படுத்தப்படும் விருசுமித்துறு வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 192 வீடுகள் படைவீரர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலும் ஜனாதிபதி குறிப்பிடுகையில்,

குறுகிய அரசியல் சதியின்றி நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்காகவும் வீரமிகு படையினர் ஆற்றிய அர்ப்பணிப்புகளால் நாடும், மக்களும் பெற்ற வெற்றியை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்வதே இன்று தேவையாக இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பி தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபட்டுவரும் போது எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர கனவுகாணும் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த சதிகளை தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென்று தெரிவித்தார்.

வீரமிகு படையினர் சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லவேண்டியிருந்த நிலையை மாற்றி உலகில் எந்தவொரு நாடோ, சர்வதேச அமைப்போ அவர்கள் மீது கை வைக்க முடியாதவாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் ஊடகவியலாளர்களை கொலை செய்து, அவர்களை காணாமல் போகச் செய்து, ஊடக நிறுவனங்களுக்கு தீ வைத்த காலத்தை முடிவுறுத்தி அனைத்து ஊடகவியலாளர்களினதும் உயிர்களை பாதுகாப்பதற்கும், ஊடக நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்த தற்போதைய அரசாங்கத்தையே விமர்சித்து நாட்டில் பிரச்சினைகள் இருப்பதாக மக்களுக்கு காட்டுவதற்கு முயற்சிக்கும் சில ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவலையடைவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

படைவீரர்கள் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தையும், படைவீரர்களையும் பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதுடன் படைவீரர்களின் நலன்களுக்காக அரசாங்கம் அமுல்படுத்தும் திட்டங்களின் கீழ் மிகவும் குறுகிய காலத்தினுள் படைவீரர்களின் வீட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பத்து படைவீரர்களுக்கான வீட்டு உறுதிகளை ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, முப்படைத் தளபதிகள், பொலீஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவை அதிகாரசபையின் தலைவி அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment