மெக்சிகோ நாட்டின் வடக்கு எல்லையோர மாநிலத்தில் இரு போதை மாபியா கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 26 பொதுமக்கள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு சொர்க்கமாக திகழும் மெக்சிகோ நாட்டின் வடக்கு எல்லையோரம் உள்ள சிஹுவாவா மாநிலத்தின் மலைப்பாங்கான நகரம் லாஸ் வராஸ். மெக்சிகோ நாட்டிலேயே போதை மருந்துகள் அதிகம் புழக்கத்தில் உள்ள இந்த நகரத்தில் நேற்று இரு கும்பல்களிடையே துப்பாச்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இரு தரப்பினருக்கும் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி 26 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் குறித்த தகவல்களும், எதற்காக இந்த சண்டை நடைபெற்றது என்ற தகவல்களும் வெளியாகவில்லை.
குறிப்பாக, போதை மருந்து மாபியாக்களால் ஏற்படும் குற்றங்களை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க உள்துறை செயலர் ஜான் கெல்லி மெக்சிகோ சிட்டி நகருக்கு வந்து, அந்நாட்டு அதிபர் பெனா நிட்டோவைச் சந்தித்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டின் சினாலா மாநிலத்தில் பொதுமக்களின் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.