தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் தண்ணீர் கேன் விலை திடீரென உயர்ந்து இருப்பதாக இல்லத்தரசிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் தண்ணீர் கேன் விலை திடீரென உயர்ந்து இருப்பதாக இல்லத்தரசிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பருவமழை பொய்த்து போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டன. மாற்று ஏற்பாடாக கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், கல்குவாரி, நெய்வேலி சுரங்கம், விவசாய பம்பு செட்டுகள் மற்றும் போரூர் ஏரிகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் சென்னை குடிநீர் வாரியம் நிலைமையை சமாளித்து வருகிறது.
பெரும்பாலான பகுதிகளில் உள்ள தெருக்குழாய்கள் மற்றும் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளை தேடி காலி குடங்களுடன் செல்வதை காணமுடிகிறது.
ஒரு சில பகுதிகளில் குழாய்களில் வரும் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் கலங்கலாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் குழாய்களில் வரும் தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. பிற தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். குடிப்பதற்கு தண்ணீர் கேனை வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்போது பெரும்பாலான குடும்பத்தினர் தண்ணீர் கேனை பயன்படுத்த தொடங்கி உள்ளதால், தண்ணீர் கேனுக்கு திடீர் மவுசு ஏற்பட்டு விட்டது.
பொதுமக்கள் அனைவருக்கும் அவர்கள் கேட்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீர் கேன் கிடைப்பதில்லை. தொடர்ச்சியாக வாங்கி வருபவர்களுக்கு மட்டும் தினசரி ஒரு தண்ணீர் கேன் வழங்கப்படுகிறது. அவ்வப்போது வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்கள் வழங்குவதில்லை என்ற புகாரும் இல்லத்தரசிகள் மத்தியில் இருக்கிறது.
சராசரியாக தண்ணீர் கேன் ஒன்று ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன் தினம் முதல் சென்னையில் ஒரு கேனுக்கு தலா ரூ.5 விலை அதிகரித்து ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வுக்கு அண்ணாநகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் வசிக் கும் இல்லத்தரசிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சராசரியாக தினசரி 2 தண்ணீர் கேன் வாங்கும் பெரிய குடும்பத்தினருக்கு தினமும் ரூ.10-ம், மாதம் ரூ.300 என்ற அளவில் கூடுதலாக செலவிட வேண்டி இருக்கிறது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு என்பதால் தான் விலை உயர்ந்துள்ளது, ஆனால் சரக்கு, சேவை வரியால் (ஜி.எஸ்.டி.) தான் தண்ணீர் கேன் விலை உயர்ந்துவிட்டதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர் என்று இல்லத்தரசிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதனை தமிழக அரசு எங்களுக்கு (இல்லத்தரசிகளுக்கு) தெளிவுபடுத்த வேண்டும். சென்னை மக்களுக்கு போதுமான அளவு தரமான குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இல்லத்தரசிகள் ஆதங்கத்துடன் கூறினார்கள்.