தமிழகத்தில் பள்ளிக்கூட மாநில பாடத்திட்ட மாற்றம் 6 மாதங்களுக்குள் தயாராகும் என்று நிபுணர் குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளிக்கூட மாநில பாடத்திட்டம் 5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். ஆனால் தற்போது பல வருடங்கள் ஆகி விட்டன.
எனவே புதிய பாடத்திட்டத்தை தரமாக மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் உறுப்பினர் – செயலாளராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி மற்றும் 8 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாடத்திட்ட மாற்றம் குறித்து நிபுணர் குழு தலைவர் எம்.ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது:-
இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து உள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் பல்வேறு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய மாற்றங்களை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். இன்னும் 6 மாதங்களில் இந்த பாடத்திட்டங்கள் தயாராகும் என்று நினைக்கிறேன்.
பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை மாற்ற வேண்டும்.
பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் தபால் அல்லது இணையதளம் மூலமாக கருத்து தெரிவிக்கலாம். தமிழக மாணவர்கள் புத்திசாலிகள். அவர்கள் பாடத்திட்டத்தை மாற்றினால் அதற்கு ஏற்ப வல்லவர்களாக வருவார்கள்.
இவ்வாறு மு.ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.