அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 மாணவர்களின் விளக்கமறியல், இம்மாதம் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணைகளுக்காக, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 மாணவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாணவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி, மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை, மேலதிக நீதவான் துலானி வீரதுங்க நிராகரித்தார்.
இது இவ்வாறு இருக்க, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தால், நுகேகொடை மற்றும் அதனை அண்மித்த இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று இடம்பெற்றிருந்தது.