135 நாட்களாக தாங்கள் போராடிவரும் நிலையில் இதுவரையில் நம்பிக்கை தரக்கூடிய எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத மத்திய, மாகாண அரசுகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றார்கள் என்பது தமக்கு கேள்வியாகவே இருந்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 135வது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது தொழில் உரிமையினை வழங்குமாறு கோரிக்கை விடுத்து மழை, வெயிலுக்கு மத்தியிலும் பட்டதாரிகள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
தினமும் பல்வேறு பிரச்சினைகளை சுமந்த வண்ணமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும்போது தமது நிலை தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிப்பதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமது போராட்டத்திற்கு தீர்வு பெற்றுத்தரும் வகையில் ஒரு சின்ன நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பது கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.
1700 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறைசேரி அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரையில் அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காமை அரசியல்வாதிகளின் அலட்சியத்தன்மையா?அல்லது அதிகாரிகளின் அலட்சியத்தன்மையா என்பது தெரியாது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான அழுத்தங்களை எமது அரசியல்வாதிகள் வழங்கவேண்டும். இதில் எந்த காழ்ப்புணர்ச்சியையும் காட்டாது கற்றவர்கள் வீதியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் பிரச்சியை தீர்ப்பதற்கு என உளப்பாங்குடன் செயற்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.