சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987 காலப்பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் காமினி திசநாயக்கா இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட செயலுக்கு ஒப்பானதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவிற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா உதவுமா -இல்லையா என்பதை அறிவதற்காகவே ஜே.ஆரால் காமினி திசநாயக்க இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். சிறிலங்காவின் இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்குத் தயாரானார். இதற்கு ஜே.ஆரும் இணங்கினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பொறுப்பை ராஜீவ் ஏற்றுக்கொண்டார். இறுதியில், சிறிலங்காவிற்கு உதவ முன்வந்தமைக்காக ராஜீவ் தனது உயிரை இழப்பீடாகச் செலுத்த வேண்டியிருந்தது.
ஜே.ஆரின் திட்டத்தைப் போன்றே தற்போது ரணிலும் சீனாவிற்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தல விமானநிலையம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கான பொறுப்பை சீனாவிடம் கையளிப்பதன் மூலம் சீனாவின் கடன்பிடிக்குள்ளிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்பதால், இக்கோரிக்கையை முன்வைப்பதற்காகவே அண்மையில் பிரதமர் சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
ஆனால் சீனாவானது இந்தியாவை விட அதிக தந்திரபுத்தியுள்ள நாடாகும் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். ஜே.ஆர் கொடுத்த மாத்திரையை இந்தியா விழுங்கியது. ஆனால் ரணில் கொடுத்த மாத்திரையை சீனா விழுங்கவில்லை.
அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தல விமானநிலையம் ஆகியவற்றை குறிப்பிட்ட சில காலத்திற்கு சீனாவிடம் கையளிப்பதென ரணில் தீர்மானித்திருந்தார். இதன் மூலம் மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட கடனை சீனாவால் மீளவும் நிரப்ப முடியும் என ரணில் பரிந்துரைத்திருந்தார்.
ஆனால் இது தனது அரசாங்கத்தின் கோட்பாடுகளுக்கு மாறானது என சீனா நிராகரித்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் கப்பல்கள் தரித்து நிற்றல் மற்றும் மத்தல விமானநிலையத்தில் விமானங்கள் தரித்து நிற்றல் அல்லது தரித்து நிற்காவிட்டாலும் கூட தனது கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்தினால் சரி என்பதே சீனாவின் மறைமுகக் கூற்றாகும்.
சீனாவின் கடன் மற்றும் வட்டி என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டது. கடன் மற்றும் வட்டியை மீளச் செலுத்த வேண்டிய நிலையிலுள்ளதால் சிறிலங்கா அரசாங்கமானது திறைசேரிப் பத்திரங்ளை வழங்கி வருகின்றது.
1980களில், வடக்கில் தோன்றிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு யுத்தத்தில் ஆதரவு வழங்குவதே சிறிலங்கா மீது அழுத்தத்தைத் தோற்றுவிப்பதற்கான இலகுவான வழி என இந்தியா கருதியது. ஆனால் இந்தியா, சிறிலங்காவிற்கு உதவியது போன்று கடன் சுமையிலிருந்து சிறிலங்கா மீள்வதற்கு சீனா உதவுமா என்பது எமக்குத் தெரியாது.
சிறிலங்கா மீது நல்லெண்ண அடிப்படையில் சீனா அணுகியிருந்தால், திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னரே மத்தல மற்றும் அம்பாந்தோட்டையில் விமானநிலையம் மற்றும் துறைமுகத்தை அமைப்பதன் மூலம் நன்மை ஏற்படுமா என்பதற்கான சாத்தியத்தை சீனா ஆராய்ந்திருக்கும். ஆனால் இவ்வாறானதொரு சாத்தியக்கூற்று ஆய்வை சீனா மேற்கொள்ளவில்லை.
சீனாவானது இரண்டு நோக்கங்களுக்காகவே இவ்விரு திட்டங்களையும் மேற்கொண்டது என்பதையே இது சுட்டிநிற்கிறது. முதலாவதாக, சிறிலங்காவைப் பெரும் கடன்சுமைக்குள் தள்ளுவது என்பதும் இரண்டாவதாக இவ்விரு துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியவற்றை சீனாவின் எதிர்கால இராணுவ மூலோபாயங்களுக்காகப் பயன்படுத்துதல் போன்றனவே சீனாவின் முக்கிய நோக்காகும்.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அமைத்ததானது இராணுவ நோக்கத்தைக் கொண்டதல்ல மாறாக இது வர்த்தக நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும் என சீனா முன்னர் தெரிவித்திருந்தது. உண்மையில் சீனா வர்த்தக நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்திருந்தால், ரணிலின் வேண்டுகோளை சீனா ஏற்றிருக்கும். ஏனெனில் ரணிலின் வேண்டுகோளானது சீனாவிற்கு வர்த்தக சார் நலனை வழங்கக் கூடியதாகும்.
எனினும், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் மத்தல விமானநிலையத்தையும் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கத்தை சீனா கொண்டுள்ளது என்பதற்கான எவ்வித சமிக்கையும் தென்படவில்லை. சிறிலங்காவைக் கையகப்படுத்தி தனது நலனை அடைந்து கொள்வதே சீனாவின் நோக்காகும். இதற்கான ஒரு உகந்த வாய்ப்பாகவே சீனா, சிறிலங்காவின் துறைமுகத்தையும் விமானநிலையத்தையும் தனது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது.
சிறிலங்காவில் சீனாவின் திட்டங்கள்:
சீனாவானது சிறிலங்காவில் தன்னால் மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவற்றின் மூலம் சிறிலங்காவிற்குள் அகலக்கால் பரப்ப முடியும் எனக் கருதுவது வெளிப்படையானதாகும். சிறிலங்காவில் இந்தியா எவ்வாறாக தமிழீழத் திட்டத்தைக் கட்டியெழுப்பியதோ அதேபோன்றே சீனாவும் சிறிலங்காவைத் தனது நோக்கத்தை அடைந்து கொள்ளப் பயன்படுத்துகிறது.
இந்தியா இத்திட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துவரப்பட்டது என்பது உண்மை. ஜே.ஆரின் தவறான வெளியுறவுக் கோட்பாடே இதற்குக் காரணமாகும். எனினும், சிறிலங்காவில் யுத்தம் ஒன்று உருவாகுவதற்கு இந்தியாவிற்கு ஜே.ஆர் ஆதரவு வழங்கவில்லை. மகிந்த அவ்வாறல்ல. இவர் தெரிந்து கொண்டே சிறிலங்காவை சீனாவின் பொறிக்குள் அகப்பட வைத்துள்ளார். இந்த நோக்கத்திற்காக மகிந்த அரசாங்கத்திற்கு தான் எவ்வளவு இலஞ்சத்தை வழங்கினேன் என்பதை சீனா நன்கறியும்.
எதுஎவ்வாறிருப்பினும், ரணிலின் திட்டத்திற்கு சீனா சம்மதிக்காததானது இந்தியாவிற்கு ஆறுதல் அளித்துள்ளது எனக் கருதமுடியாது. ரணிலின் இத்திட்டத்தை சீனா ஏற்றுக்கொண்டு அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தல விமானநிலையத்தை குறிப்பிட்ட காலத்திற்குத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தால், இந்தியாவிற்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக இது அமைந்திருக்கும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா உடன்பட்ட அதேவேளையில் சிறிலங்காவில் இந்தியாவின் வெளிநாட்டு எதிரிகள் காலூன்றுவதற்கான வாய்ப்பை இந்தியா தடுத்தது. இந்த உடன்படிக்கையின் ஊடாக இந்தியா, திருகோணமலைத் துறைமுகம் தொடர்பில் சிறிலங்காவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
ஆனால் சீனா இவ்வாறானதொரு தொலைநோக்குடன் செயற்படுவதற்கான எவ்வித சமிக்கையும் தென்படவில்லை. சீனாவைப் பொறுத்தளவில் தற்போது பணம் மட்டுமே தேவைப்படுகிறது. சிறிலங்கா வாழ் மக்கள் மீது மேலும் சுமையை அதிகரித்து அதன்மூலம் சிறிலங்கா அரசாங்கமானது தனது கடன் மற்றும் வட்டியை மீளச்செலுத்த வேண்டும் என்பதையே சீனா விரும்புகிறது.
சீனா இன்னமும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் மத்தல விமானநிலையத்தைத் தனது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இதற்கு இன்னமும் 10 அல்லது 20 ஆண்டுகள் எடுக்கலாம். தற்போது சீனா தன்னைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்து வருகிறது.
2015 அதிபர் தேர்தலில் மகிந்த வென்றிருந்தால், கடன் மற்றும் வட்டியைச் செலுத்துவதற்கு வேறு நாடுகளிடம் உதவியைக் கோரியிருக்க முடியாதிருந்திருப்பார். யப்பானோ அல்லது அனைத்துலக நாணய நிதியமோ மைத்திரி அரசாங்கத்திற்கு உதவுவது போல் மகிந்தவுக்கு உதவியிருக்காது. இந்த நிலை ஏற்பட்டிருந்தால், சீனா மகிந்தவின் கழுத்தை மேலும் நசுக்கியிருக்கும்.
அத்துடன் சீனாவின் பொருளாதாரம் மற்றும் யுத்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சிறிலங்கா தற்போது சீனாவின் அதிகாரத்திற்குள் சென்றிருக்கும். இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த சீனா, ‘சீனர்களின் கடன்’ என்கின்ற கயிற்றால் மகிந்த அரசாங்கத்தை நெரித்துக் கொண்டிருந்த வேளையில் கொழும்புத் துறைமுகத்தில் தனது நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தியிருந்தது.
தற்போது மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் கழுத்தைத் தனது கடன் என்கின்ற கயிற்றால் நெரிக்கும் திறனை சீனா கொண்டிருக்கவில்லை. எனினும், சீனக் கடன் பொறிக்குள்ளிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மைத்திரி-ரணில் அரசாங்கம் வெவ்வேறு தரப்பிடமும் உதவி கோரும் போது, குறித்த தரப்பினர் சிறிலங்காவிற்கு உதவுவதில் ஆர்வமாக இருப்பார்களா என்பதை அறிய சீனா விழிப்புடன் உள்ளது. இதற்காக சிறிலங்கா தொடர்பில் சீனா ஏதாவது அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளதா அல்லது இல்லையா என்பதும் எமக்குத் தெரியாது.
ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம் – சிலோன் ரூடே
மொழியாக்கம் – நித்தியபாரதி