சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும் என்று ஈரோடு புத்தக திருவிழாவில் பழ.நெடுமாறன் பேசினார். புத்தக திருவிழா ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதில் 230 அரங்குகள் உள்ளன.
12-வது ஆண்டாக மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடக்கும் இந்த புத்தக திருவிழா தொடக்க விழாவுக்கு பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி தலைவர் பால சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவை செயலாளர் பாலன் வரவேற்றார்.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரை நிகழ்த்தினார்.
சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமி புத்தக அரங்கை திறந்து வைத்து பேசினார்.விழாவில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு உலக தமிழர் படைப்பரங்கத்தை திறந்து வைத்து பேசினார்.
என்னை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் கவிஞர் கண்ணதாசன் தான்.
மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் நிலைத்து நிற்பதில்லை. பல மன்னர்கள் கட்டிய அரண்மனைகள் கூட இன்று அழிந்து விட்டன. நாகரீகம், இனங்கள் காலப்போக்கில் மறையும். ஆனால் புத்தகங்கள் படைப்பாக்கம் அழிவற்றது.
செங்குட்டுவன் காலத்தில் அவன் இமயம் வரை சென்று கனக விஜயனை வென்று இமயத்தில் கல் எடுத்து வந்து கண்ணகி சிலை வைத்தான் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. இன்று அவன் வாழ்ந்த மாளிகை இல்லை. ஆனால் சிவப்பதிகாரம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்.
இலக்கியங்களை படைத்தவர்கள் மறைந்தாலும் இலக்கியங்கள் சாகா வரம் பெற்று வாழுகின்றன.
இளைஞர்கள் புத்தகங்களை அதிகமாக படிக்க வேண்டும். படித்தால் மட்டுமே தமிழர்களுக்கு எதிர்காலம் உள்ளது. சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும். தமிழகத்தில் நூல்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன.தமிழகத்தில் உள்ள நூல்களை செம்மைப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகம் வாசிப்பு பழக்கம் ஊர் ஊராக பரவ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.