ஜெயபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வயல் நிலங்கள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை

8388 0

ஜெயபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வயல் நிலங்கள் பகிர்ந்தளிக்க சிறீதரன் எம்.பி நடவடிக்கை.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வயல் நிலங்கள் இன்னமும் வழங்கப்படாதமையால் வாழ்வாதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பல்வேறுபட்ட கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதையடுத்து ஜெயபுரத்திற்கு இன்றைய தினம் (02.07.2017) காலை சென்று மக்களுடன் வயற்காணிகளைப் பார்வையிட்டதுடன் அக்காணிகள் அங்குள்ள மக்களுக்கு உரிய முறைப்படி பகிர்ந்தளிப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வசதிவாய்ப்புக்களில் பின்தங்கிய நிலையில் காணப்படும் ஜெயபுரம் கிராமத்தில் வாழும் மக்களில் பலர் வாழ்வாதாரத் தொழில்கள் ஏதும் இன்றிய நிலையில் பல்வேறுபட்ட கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இங்கு வசிக்கும் மக்களில் அதிகளவானவர்கள் இனக்கலவரங்களின் போது சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்து ஜெயபுரத்தில் குடியேறியவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
ஜெயபுரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக 1984 ஆம் ஆண்டு அப்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஜெகநாதன் அவர்களால் 2 ஏக்கர் வயல் காணி வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வயற்காணிகளை இங்கண்டு நில அளவீடுகளும் இடம்பெற்றிருந்தமையும் தொடர்ந்து நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள், அரசியல் ஸ்திரமின்மைகள் காரணமாக தற்போது வரை ஜெயபுரம் மக்களுக்கான வயற்காணிகள் வழங்கப்படவில்லை. இதனை ஜெயபுரம் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது கவனத்திற்குக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் காலை ஜெயபுரத்திற்கு நேரடியாகச் சென்றபாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அங்கு வசிக்கும் மக்களுடன் அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட வயற்காணிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பில் உரிய தரப்பினருடன் தொடர்புகொண்டு இக்காணிகள் மக்களுக்குக் கிடைக்க ஆவன செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஜெயபுரத்தில் பண்டிவெட்டிக் குளத்தின் கீழ் 50 குடும்பங்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் மேட்டு நிலமும் அரச விவசாயப் பண்ணைக்குரிய நிலமும் எவ்வித பயிர்ச் செய்கையுமின்றிய நிலையில் நீண்டகாலமாகக் காணப்படுகின்றது. மற்றும் தேவன்குளத்தின் கீழ் இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஏக்கர் வயற்காணி வீதம் ஒதுக்கப்பட்டுள்ள நிலம் இம்மக்களிடம் இன்னமும் கையளிக்கப்படாதமையால் பற்றைக் காடு பற்றிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment