மட்டக்களப்பு காவற்துறை நிலையத்தில் வைத்து இரண்டு தமிழ் இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் தலா 10 லட்சம் வீதம் 20 லட்சம் ரூபாய் நட்ட ஈட்டை வழங்க அரசாங்கத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு காவற்துறையினால் செல்வராஜ் குணசீலன் மற்றும் கே. குகதாஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது சடலங்கள் கடலில் எறியப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நியாயம் கோரி குறித்த இரண்டு இளைஞர்களதும் உறவினர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று மூவரடங்கிய நீதியரசர்கள் குழவினால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டியுள்ளதன் காரணமாக மனுதாரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் நட்ட ஈட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றத்தினால் மட்டக்களப்பு காவற்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய டீ.எஸ் விக்ரமசிங்ஹவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.