கஹட்டகஸ்திகிலிய – ரன்பத்வில பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தரை தாக்கி படுகாயமடைய செய்தமை தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் கஹட்டகஸ்திகிலிய காவற்துறையில் சேவைப் புரியும் காவற்துறை உத்தியோகஸ்தர் என்பதுடன், அவர் தற்போது அநுராபுரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
தலைக்கவசம் இன்றி உந்துருளியில் பயணித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சென்ற போது குறித்த உந்துருளியில் இருந்த இரு இளைஞருக்கும், காவற்துறை உத்தியோகஸ்தருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த இரு இளைஞர்களும் அங்கிருந்து சென்றுள்ள நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் மேலும் 5 இளைஞர்களுடன் வந்து குறித்த இரு இளைஞர்களும் அந்த காவற்துறை உத்தியோகஸ்தரை திட்டி, எச்சரித்து, சாரதி அனுமதி பத்திரத்தை கோரியுள்ளனர்.
இதன்போது அந்த கோரிக்கையை நிராகரித்த காவற்துறை உத்தியோகஸ்தரை வாளால் தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதில் படுகாயமடைந்த அவர் கஹட்டகஸ்திகிலிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் கஹட்டகஸ்திகிலிய – ரன்பத்வில – ரொட்டபெக்குன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கஹட்டகஸ்திகிலிய காவற்துறை தெரிவித்துள்ளது.