எதிர்வரும் 6ஆம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் தொடர்பான சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து வட மாகாண கடற்றொழில் இணையத்தினரால் இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இலங்கை கடல் எல்லையில் வேறு நாட்டவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடை தொடர்பிலும், தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்கள் தொடர்பிலுமான சட்ட மூலம் ஒன்று எதிர்வரும் 6 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இச்சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து வட மாகாண கடற்றொழில் இணையத்தினரால் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் கூட்டம் நடாத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன், த.சித்தார்த்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி கூறி வட மாகாண கடற்றொழில் இணைய நிர்வாகத்தினர் கூட்டத்தை நிறைவு செய்ததாக அறிவித்த நிலையில், கூட்டத்தில் பங்குகொண்டிருந்த கடற்றொழிலாளர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் தருமாறு கோரினர்.
இதற்குப் பதிலளித்த இணைய நிர்வாகத்தினர் உங்களுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான கூட்டம் இதுவல்ல எனத் தெரிவித்தபோது, கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.