அமைச்சர் ராஜிதவுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் ரிசாத் கடிதம்

253 0

புத்தளம் ,கல்பிட்டி, குருநாகல்; சிலவத்துறைமன்னார் கிண்ணியா தோப்பூர் சம்மாந்துறை உள்ளிட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை உடன் நிவர்த்திக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன எடுத்த முயற்சிகளுக்கு தமது நன்றிகளை தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சுகாதார அமைச்சில் சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்; றிசாத் பதியுதீன் தலைமையிலான பிரதி நிதிகள் தற்போது மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளின் நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் குறித்து விளங்கப்படுத்தியதுடன், அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஏற்கனவே இது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுப்பிய கடிதம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக கிண்ணியா வைத்தியசாலை அப்பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்து வருகின்றமையாலும், அண்மைக்காலமாக அப்பிரதேசத்தில் ஏற்பட்ட டெங்கு தாக்கத்திற்கு பின்னர் எடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் பற்றி சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், இதனை அதி நவீன வசதிகள் கொண்ட வைத்திய சாலையாக அமைக்க தேவையான நிதியினை வழங்க சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இணக்கம் வெளியிட்டமைக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது விசேட நன்றியினை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இங்கு இப்பிரதி நிதிகளினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாதாகமாக பரிசீலனை செய்த சுகாதார அமைச்சர் தமது அதிகாரிகளுக்கு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் பணிப்புரை வழங்கியதுடன், அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கு தேவையான நிதியினையும் ஒதுக்கீடு செய்தார்.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் வைத்தியசாலையினை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கென 101 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், அதில் 30மில்லியன்களை உடனடியாக விடுவிப்பு செய்து ஆறு மாதகாலத்துக்குள் அவசர தேவையான பணிகளை முடிவுக்;கு கொண்டுவருமாறும் தெரிவித்த சுகாதார அமைச்சர் கல்பிட்டி வைத்தியசாலையினை ஒரு மாதகாலத்துக்குள் தரமுயர்த்துவதுடன்,வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 150 மில்லியன்களை ஒதுக்கீடு செய்வதாகவும் கூறினார்.

அதேவேளை மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு குறைபாடுகள் காணப்படுவது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்னவினால் கவனம் செலுத்தப்பட்டதுடன் புதிய வைத்தியர்கள் நியமனத்தின் போது 9 வைத்தியர்களை மேற்படி பிரதேசத்திற்கு நியமிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிய அமைச்சர் மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் உபகரண கொள்வனவுக்கு என 50 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாகவும், ஏற்கனவே மன்னார் வைத்தியசாலையினை வெளிநாட்டு நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் 550 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனையும் உடன் ஆரம்பிக்க தேவையான நடவடிக்கையெடுப்பதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான இப்பிரதி நிதிகளிடத்தில் சுகாதர அமைச்சர் தெரிவித்தார்.
வேப்பங்குளம் பண்டாரவெளி இரணைஇலுப்பைக்குளம் மறிச்சுக்கட்டி சிலாவத்துறை விடத்தில்தீவு அடம்பன் உள்ளிட்ட மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளை புனரமைத்து செய்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கையெடுப்பதாகவும் சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

அதே வேளை மேற்படி வைத்தியசாலைகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினைமேற்கொள்ளுமாறு அமைச்சர் றிசாத் பதியுதீனினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வெகுவிரைவில் இங்கு வருகைததரவுள்ளதாகவும் கூறியமையினை நினைவுபடுத்திய அமைச்சர் றிசாத் பதியுதீன் சுகாதார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment