தைரியமானவராக இருந்தால் அரசியலுக்கு ரஜினி உடனே வரவேண்டும்: அன்புமணி

275 0

நடிகர் ரஜினிகாந்த் தைரியமானவராக இருந்தால் அரசியலுக்கு உடனடியாக வரவேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆறு பாதுகாப்பு பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று இரவு நடந்தது. இதில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளில் 32 ஆறுகளில் தண்ணீர் ஓடவில்லை. ஆனால் தண்ணீர் ஓடக்கூடிய ஒரு ஜீவநதி தாமிரபரணி தான். இந்த ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்கின்ற தண்ணீரை தடுப்பணைகள் மூலமாகவும், வெள்ளநீர் கால்வாய் திட்டம் மூலமும் பாதுகாக்க வேண்டும். மணல் கொள்ளை நடக்கிறது இதை தடுக்கவேண்டும். இல்லை என்றால் தாமிரபரணி சென்னையில் ஓடுகின்ற கூவம் நதியை போல் ஆகிவிடும்.

50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க.-தி.மு.க. நாட்டை சீரழித்துவிட்டனர். புதிய அணைகள் எதுவும் கட்டவில்லை. தமிழகத்தை வளப்படுத்த என்னால் மட்டும் தான் முடியும். நீங்கள் மாற்றத்தை கொடுங்கள் நான் முன்னேற்றத்தை தருகிறேன்.

ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் உங்கள் கட்சி நிர்வாகிகள் நடத்தும் மது ஆலைகளை மூடுங்கள். தமிழகத்திற்கு மத்திய அரசு பல துரோகங்களை செய்து வருகிறது.

தமிழக மக்கள் நடிகர்களை தான் நம்புகிறார்கள். இதனால் தான் நடிகர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ரஜினிகாந்த் எனது திருமணத்திற்கு முன்பே அரசியலுக்கு வருவதாக கூறினார். அவர் எனது பேரன் திருமணத்தின் போது கூட வரமாட்டார்.

தைரியமானவராக இருந்தால் உடனே வரவேண்டும். வருவேன்.. வருவேன் என்று ஏமாற்றி கொண்டு இருப்பவர். கோழை தனம் கொண்டவர் ரஜினி.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் தமிழகத்தை ஆட்சி செய்ய நடிகர்கள் தேவையில்லை. நல்ல நிர்வாகிகள், நல்ல ஆட்சியாளர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் தேவை.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment