ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்ட சதி

267 0

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்க அமெரிக்கா செய்த திட்டமிட்ட சதி என்று வெள்ளையன் குற்றம் சாட்டினார்.

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நேற்று (1-ந்தேதி) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வணிகர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சில்லரை வணிகர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். நமது நாட்டின் சுயதொழில்கள் உள்நாட்டு உற்பத்திகள் அழியும் நிலை ஏற்படும்.

நமது நாட்டில் ஆன்லைன் வணிகத்தை அதிகரிக்க அமெரிக்கா செய்த திட்டமிட்ட சதி ஆகும். பணக்கார நாடுகளின் நிர்பந்தத்தால் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்களுக்கு ஒரு பெரிய சுமை ஏற்படும். மக்கள் வேதனையை தான் அனுபவிப்பார்கள்.

நமது நாட்டில் வணிகத்தை மீண்டும் கைப்பற்ற அன்னிய நாடுகள் செய்யும் மிகப் பெரிய சதி திட்டமாகும். நமது நாட்டின் எல்லா இயற்கை வளங்களையும், விவசாயத்தையும், அழித்து இறக்குமதியை நம்பி இருக்கும் சூழ்நிலையை உருவாக்குவார்கள்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் நமது நாட்டுக்கு கொண்டு வருவார்கள். இதனால் நமது மக்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுத்துவார்கள்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அன்னியர்கள் நமது நாட்டுக்குள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தவருவார்கள். நமது நாட்டின் சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்படும். மீண்டும் காலனி ஆதிக்கத்தை உருவாக்க முயலுவார்கள்.

நமது நாட்டுக்கு கேடு உருவாக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை உடனடியாக கைவிட வேண்டும். நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.

Leave a comment