சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களின் தேர்தல் அல்லது உள்ளுராட்சி சபை என்பன அறிவிக்கப்படும் தினத்தன்று 18 வயதை அடைந்துள்ள சகல இளைஞர்,யுவதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு குறித்த தினத்தன்று 18 வயதை அடைந்துள்ள சகலருடைய பெயர்களும் அடங்கும் வகையில் இடைக்கால பெயர்ப்பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பான சட்ட ஒழுங்குகளை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடந்தால் அதற்காக 2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படவுள்ளது. இதனால், கடந்த 2016ஜூன் மாதம் முதல் இவ்வருடம் ஒக்டோபர் வரையில் 18 வயதை அடைந்துள்ள இளைஞர், யுவதிகள் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடுகின்றனர்.
இதற்கான ஒரு உடனடி தீர்வாக இடைக்கால பெயர்ப்பட்டியல் ஒன்றை தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.