ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையினரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் எவ்விதமான ஆதாரமுமற்றவை என கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதேவேளை, இக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரியமுறையில் பதிலளிக்க வேண்டும். அப்படி பதிலளிக்காவிடின் நிலைமை மோசமடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதம் குறித்தும் அதன் பாரதூரம் குறித்தும் கிராண்ட்பாஸில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்;
நேற்று முன்தினம் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவை சந்தித்தது. இதனையடுத்து ஜனாதிபதி நியமிக்கும் சுயாதீன ஆணைக்குழு மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் மகஜர் ஒன்றினை ஜனாதிபதியிடம் கையளித்தது.
மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் இத்தேபான தம்மாலங்காரவின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு குறிப்பிட்ட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பாரதூரமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் முஸ்லிம்கள் தொல்பொருள் இடங்களை அழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம்கள் நாட்டுக்குள் பாரியளவில் போதைப்பொருள் கடத்துவதாகவும் சிங்கள இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை திணிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, சிங்கள பெண்களுக்கு திட்டமிட்டு கருத்தடை சிகிச்சை முஸ்லிம்கள் அளிப்பதாகவும் கருத்தடை மாத்திரை வழங்ப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் குறித்த கடிதத்தில் இருக்கின்றன.
இந்த குற்றச்சாட்டுக்கள் அண்மைக்காலமாக நாட்டில் பல முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு அச்சிநிலையொன்று தோற்றுவிக்கப்பட்டது. இதனால் பல பிரதேசங்களில் முஸ்லிம் உணவகங்களில் சிங்கள மக்கள் நுகர்வது தடுக்கப்பட்டதோடு வீணான குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டன.
இதனை வலுவூட்டும் வகையிலேயே குறித்த கடிதமும் அமையப்பெற்றுள்ளது.
அத்துடன் சிங்கள பிரதேசங்களில் முஸ்லிம்கள் குடியேறுவதாகவும் அங்கு விகாரைகளுக்கு சேதம் விளைவிப்பதாகவும் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை உடைக்கப்படுவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் சிங்கள மக்கள் உணர்ச்சியூட்டப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அத்தோடு, முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் காலூன்றுவதாகவும் திட்டமிட்டு பௌத்தர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.
கடந்த காலங்களில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான விசமப் பிரசாரங்களை முன்வைத்து வந்தனர். அதன்தொடராக இன்று படித்த பிக்குகளால் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றமை பாரதூரமானதாகும்.
குறிப்பாக படித்த மேல்தர சிங்கள மக்கள் கடந்த காலங்களில் இன, மத வாதத்திற்கு எதிராக செயற்பட்டனர்.
இன்று அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்காளர்களின் கோஷங்களை கையில் எடுத்திருக்கின்றனர். இது நாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இன்று வியாபித்து வரும் நிலையில் இந்த பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும். இல்லையேல் நாடு பெரும் ஆபத்தை சந்திக்கும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானதா என அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும். அதற்காக நீதமான முறையில் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். இதுவே இன்றைய குழப்பங்களை சீர் செய்ய வழியாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.