கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் வளங்களினாலான கைவினைப்பொருட்களின் உற்பத்தி, விற்பனை நிலையம் 29.06.2017 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பரமதாஸன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோருடன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் மற்றும் UNDP பிரதிநிதிகளும் கலந்துசிறப்பித்தனர்.
மேலும் குறித்த விற்பனை நிலையமானது 2016ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து 1 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமையுடன், குறித்த நிலையத்தில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சிற்பிகளிலான கைவினைப்பொருட்கள், பனம்பொருள் உற்பத்திகள் போன்றன விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் குறித்த நிலையம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்துசெல்லும் பெருக்கமரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளபடியினால் அது எமது உள்ளூர் உற்பத்திகளின் சந்தைவாய்ப்பை பெறுவதற்கு மிகவும் உதவியாக இருப்பதோடு உள்ளூர் உற்பத்தியாளர்களின் வருவாயை அதிகரிக்குமெனவும் கிராமமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.