கனடாவில், தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளார்.
இந்த தகவலை தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடாவின் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த இலங்கை பெண் குறிப்பிட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், கடந்த 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார்.
தாம் 1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைந்ததாக ஆரம்பத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்த அவர் 1994ஆம் ஆண்டுவரை அந்த இயக்கத்தில் அங்கம் வகித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரின் அரசியல் அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து பொது பாதுகாப்பு அமைச்சரின் நிவாரணத்துக்காக விண்ணப்பித்திருந்தார்.
எனினும் அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த இலங்கை தமிழ் பெண் புதிய முன்னகற்றுதல் இடர் மதிப்பீடு கோரிக்கையை முன்வைக்க முடியும் என கனேடிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர், சுகவீனமுற்றிருக்கும் தனது கணவர் மற்றும் தமது பிள்ளைகளின் கல்விக்காக கனடாவில் தங்கியிருக்க வேண்டும் என கோரி மனுவை தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக கனேடிய செய்தித்தாள் தெரிவித்துள்ளது.