சைட்டம் நிறுவனத்திற்கு மகிந்த அனுமதி வழங்கவில்லை!-உதய கம்மன்பில

256 0

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுமதி வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் சத்தியா கிரகப் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவப் பீட மாணவர்களின் பெற்றோரின் போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சைட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து அதற்கு எதிராக நிலைப்பாட்டையே நான் கொண்டிருந்தேன்.

பழைய ஊடக தகவல்களை தேடிப்பார்த்தால் இதனை அறிந்து கொள்ள முடியும். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சைட்டம் நிறுவனத்திற்கு எப்போதும் அனுமதி வழங்கியதில்லை. எவ்வித சட்டவிதிகளும் இன்றி சைட்டம் நிறுவனம் திருட்டு கடையாக ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் சைட்டம் நிறுவனத்திற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மகிந்த ராஜபக்ச , சைட்டம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கினார் என எவராவது கூறினால் அது பச்சை பொய்.

அனுமதி வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகளை சைட்டம் நிறுவனத்தினால் நிறைவேற்ற முடியாமல் போனது என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சைட்டம் நிறுவனத்திற்கு முன்னாள் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் 600 மில்லியன் ரூபா வங்கி கடனை வழங்கியது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அந்த மருத்துவக் கல்லூரியில் பயில புலமைப் பரிசில்களை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment