யாழ் மாவட்டச்செயலகத்தில் அமைந்துள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தால் வடக்கு மக்களுக்கு திருப்தியான சேவைகள் வழக்கப்படுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முதலாவது பிராந்திய கொன்சியூலர் அலுவலகம், அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. சகல கொன்சியூலர் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கென குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினூடாக வெளிநாடுகளில் தவிக்கவிடப்பட்டுள்ள இலங்கையர்களை எமது நாட்டுக்கு கொண்டு வருவதற்கும், வெளிநாடுகளில் இறந்த குடும்ப அங்கத்தவர்களின் பூத உடல்களை திரும்பவும் கொண்டு வருவதற்கான உதவிகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்
அத்துடன் வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்கள் மூலமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு சட்டஉதவி மற்றும் வெளிநாடுகளில் தனித்து விடப்படும் இலங்கை மீனவர்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்
மேலும் விசா நடைமுறைகளுக்கான ஆவணங்களை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் உண்மையானவை என உறுதிப்படுத்தும் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இதுவரைகாலமும் கொழும்பில் இயங்கி வந்த இந்த அலுவலகம் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் பிராந்திய அலுவலமாக திறந்து வைக்கப்பட்டது. இதனால் வடக்கில் உள்ள மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்பினையும் கொண்டிருந்தனர்.
ஆனால் குறித்த அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிறைவான பயன் எவையும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது வடக்கு மாகாணத்தில் இருந்து குறித்த அலுவலகத்தை நம்பி தமது தேவைகளை இலகுவாக நிறைவேற்ற மக்கள் வருகிறார்கள். ஆனால் அங்கு செல்லும் மக்களை கருத்தில் கொள்வதில்லை. குறித்த சேவையின் வலையமைப்பில் பழுது காணப்படுவதாக அடிக்கடி அந்த அலுவலர்கள் தெரிவித்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு பல பகுதிகளிலும் இருந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் வருகிறார்கள் ஆனால் அவர்கள் காலையில் இருந்து காவல் காத்து தமது தேவையை நிறைவு செய்யாமலேயே திரும்பி செல்கிறார்கள்.
அங்குள்ள அலுவலர்களிடம் காரணத்தை கேட்டால் கொழும்பில் தான் குறித்த சேவைகளை சரிபடுத்த முடியும் எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
எமக்கான சேவைகளை இலகுவில் பெறுவதற்கு தான் நாம் இந்த அலுவலகத்தை நாடி வருகிறோம் இவ்வாறு அலைக்கழித்து எங்களை வதைக்க வேண்டாம் என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். எனவே குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் விரைவில் நடவடிக்கை எடுத்து இந்த சேவையை திறம்பட செயற்படுத்த உதவி செய்யுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.