நல்லாட்சியில் மட்டு. போஷாக்கு நிறைந்த மாவட்டமாக மற்றப்படும்

282 0

மட்டக்களப்பு மாவட்டத்தை போஷாக்கு நிறைந்த மாவட்டமாக நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மாற்றுவோம் என கடல்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும், மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

ஓட்டமாவடி காவத்தமுனையில் நங்கூரமிடும் தள அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் மூலம் மீனவர்களுக்காக பலநோக்கு மண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்வு மீனவர் சங்கத் தலைவர் எம்.எச்.சுபைர் தலைமையில் நேற்று (29) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மீனவர்களுக்கு தற்போது தொழில் மூலம் அதிகமான இலாபங்கள் கிடைப்பது குறைவு. மீனவர்களின் தொழிலை நவீன முறையில் அபிவிருத்தி செய்து அவர்களுக்கு அதிக இலாபம் கிடைப்பதற்கான வேலைத் திட்டத்தினை இந்த நல்லாட்சி முன்னெடுத்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக வறுமைக் கோட்டின் கீழ் மக்கள் வாழ்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன மதவேறுகள் இன்றி மீனவ மக்களிடம் உள்ள குறைகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதுடன், கடல் தொழிலாளர்களுக்கு விரைவில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படும்.

மீனவ தொழிலாளர்களின் நன்மை கருதி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு எதிர்காலத்தில் கடற்றொழில் அமைச்சின் மூலம் தொழில் முயற்சிக்கான ஊக்குவிப்பு, வீடமைப்புத் திட்டம், மீனவ குடும்பங்களின் மாணவர்களுக்கான கல்வி திட்டம் உட்பட பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எஸ்.எம்.தௌபீக், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல், மட்டக்களப்பு மாவட்ட மீனவர் திணைக்கள உதவிப் பணிப்பாளர் குரூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி காவத்தமுனை மதீனா மீனவர் சங்கத்திற்கான பலநோக்கு மண்டபம் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது.

Leave a comment