சென்னைக்கு ஜூலை 15-ந்தேதி முதல் போரூர் ஏரி தண்ணீர் வழங்கப்படும்

409 0

போரூர் ஏரி தண்ணீரை சென்னைக்கு குடிநீராக பயன்படுத்த குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிகள் முடிந்த பின்னர் 15-ந்தேதி முதல் போரூர் தண்ணீரை சென்னைக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடப்பதால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் வீராணம் குழாய் வழியாக நெய்வேலி நிலக்கரி சுரங்க தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இது தவிர கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தண்ணீர் பெறப்படுவதுடன் மாங்காடு அருகே உள்ள 22 கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

மேலும் விவசாய கிணறு ள், ஆழ்குழாய் ‘போர்வெல்’ மூலமும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.சென்னைக்கு 851 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது 450 மில்லியன் தண்ணீர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

இதனால் போரூர் ஏரி தண்ணீரை சென்னைக்கு குடிநீராக பயன்படுத்த குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக அந்த வழியாக செல்லும் வீராணம் குழாயில் போரூர் ஏரி தண்ணீரை அனுப்ப குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் இன்னும் 10 நாளில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பிறகு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு 15-ந்தேதி முதல் போரூர் தண்ணீரை சென்னைக்கு வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.தினமும் 4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீதம் 120 நாட்களுக்கு போரூர் ஏரி தண்ணீரை பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a comment