மதுரையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா

5164 0

தமிழக முதல் – அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 75 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று முதல் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் வரை தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும் விழா கொண்டாடப்பட உள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் இன்று நடக்கிறது. இதற்காக ரிங் ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகிக்கின்றனர். தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார்.

விழாவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 75 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டமாக மதுரையில் சில நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

விழாவில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித் துரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

முன்னதாக எம்.ஜி. ஆரின் புகழ் பரப்பும் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் விழா மேடையில் நடைபெறுகின்றன.

பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், பரத நாட்டிய நிகழ்ச்சி போன்றவையும் விழாவில் இடம் பெறுகின்றன.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்கிறார்கள். மதுரை கலெக்டர் வீரராகவராவ் நன்றி கூறுகிறார்.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சருக்கு பாண்டிகோவில் அம்மா திடலில் உள்ள விழா மேடை வரை கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா திடலில் அரசின் செய்தித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அங்கு நடைபெற்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்த அவர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலிக்கின்றன. அவரது படங்களும், அ.தி.மு.க. கொடிகளும் நகர் முழுவதும் காட்சி அளிக்கின்றன. விழாவையொட்டி மதுரை மாநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a comment