தமக்குரிய பதில் வழங்கப்படும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஜனாதிபதி காலத்தை கடத்தாது உடன் பதில் வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணாமல்ஆக்கப்பட்டோரின், உறவுகளின் போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் வவுனியா வீதி அதிகார சபைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 114 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் தமது பிள்ளைகளின் பெயர் விபரங்களை வெளியிடவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தீர்வுகளின்றி போராட்டங்கள் தொடர்கின்றன
இதுமாத்திரமன்றி யாழ்ப்பாணம் மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமும், தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.இதேவேளை திருகோணமலை மாவட்ட ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுத்து வரும் போராட்டமும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.