புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை மன்று அடிப்படையிலான விசாரணைகள் இன்று இரண்டாம் நாளாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று இந்த வழக்கில் முக்கிய சாட்சி, அரசதரப்பு சாட்சியாக சாட்சியம் வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
நேற்றையதினம் பிரதி சட்டமா அதிபர் மன்றில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
அதில் வித்தியாவின் சம்பவமானது ஒரு சர்வதேச சதி எனவும், அது நாட்டின் நற்பெயரை கெடுக்கும் பொருட்டு தீட்டப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிட்டார்.
தெற்காசிய நாடுகளில் வயது குறைந்த ஒரு அழகிய பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்வதும் அதனை நேரலையாக ஒளிபரப்பு செய்வதற்கும் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் வைத்து கையொப்பம் இடப்பட்டுள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.
அந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் ஒன்பது சந்தேகத்திற்குரியவர்களுள் இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஆறாம் சந்தேகநபர்களே வன்புணர்வை புரிந்தாகவும் அவர்களில் ஐந்தாவது மற்றும் ஆறாவது சந்தேக நபர்கள் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளதாகவும் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்தார்.
பின்னர் அந்த காணொளி தொகுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இந்த வழக்குக்கான தீர்ப்பு, சாதாரண மக்களுக்கும் ஒரு செய்தியை தெரிவிப்பதாக இருக்க வேண்டும் எனவும் பிரதி சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து வித்தியாவின் தாயார் சாட்சியம் அளித்ததுடன், வித்தியாவின் வழக்கு பொருட்களையும் அடையாளம் காட்டினார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணைகள் நேற்று நிறைவு பெற்று இன்று மீண்டும் தொடரவுள்ளது.
இன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பில் ஐந்தாவது சாட்சி, அரசதரப்பு சாட்சியாக வாக்கு மூலம் வழங்க உள்ளார்.