இலங்கையின் மருத்துவக் கல்வித்துறையில் விச ஜந்தாகப் புகுந்திருக்கும் சைட்டத்தை அரசு இழுத்து மூடும்வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடக்குமென இலங்கை ஆசிரியர் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மருத்துவப் பட்டப்படிப்பின் தரம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
அதை வெறும் வியாபாரமாக்கி மருத்துவத் துறைக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள அரசு தனது தன்னிச்சையான முடிவுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவர்கள், சிவில் அமைப்புகள், ஆசிரிய சங்கங்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் முன்னெடுக்கும் சாத்வீகப் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறையைப் பிரயோகித்து வருவது வேதனைக்குரிய விடயம்.
இத்தகைய போராட்டங்களின் மூலகாரணத்தைப் புரிந்துகொள்ள மறுக்கும் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளைத் துவம்சம் செய்துகொண்டு தனியார் வியாபாரத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சுமார் 8 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் விரிவுரைகளைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது அவர்களின் எதிர்காலத்தை மட்டுமன்றி, நாட்டின் எதிர்காலத்தையும் சீரழித்து வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.