நேபாளம்: இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 62% வாக்குப்பதிவு

342 0

நேபாளத்தில் ஏற்கனவே மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

நேபாள நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி மே 14-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. மாதேசி கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நடந்த இந்த தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த தேர்தலுக்கு மாதேசி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாகாண எல்லை தொடர்பான மறுவரையறை உள்ளிட்ட அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக புதிய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர்.
அதேசமயம், மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நிறைவேற்றப்படும் என பிரதமர் பிரசண்டா தெரிவித்திருந்தார். மாதேசி முன்னணியின் கோரிக்கைகள் தொடர்பான மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஜூன் 14-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மாதேசி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தேராய் பிராந்தியத்தில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாதேசி சார்ந்த 7 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவான ‘நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி’  தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தேர்தல் நடத்துவதற்கு அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, இரண்டாம் கட்ட தேர்தலை மூன்றாவது முறையாக ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.
காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 4.30 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்றது. 334 இடங்களுக்கான தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a comment