சீக்கிய மகாராஜா நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சீக்கிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19ஆம் நூற்றாண்டை சேர்ந்த சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் பாகிஸ்தானின் லாகூரில் உயிரிழந்தார். அவரது நினைவு தின நிகழ்ச்சி ஜூன் 21 முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சீக்கிய அமைப்பை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் செல்ல முடிவு செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய சிரோன்மனி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி என்ற சீக்கிய அமைப்பினர், பாகிஸ்தான் செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அவர்கள் பாகிஸ்தான் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.
தற்போதுள்ள இந்தியா – பாகிஸ்தான் உறவில் விரிசல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் செல்ல சுமார் 100-க்கும் அதிகமானோர் பாகிஸ்தான் செல்லும் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையம் வந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக பயணம் ரத்து செய்யப்பட்டதை அறிந்து சீக்கிய அமைப்பினர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து சீக்கிய அமைப்பின் செயலாளர் ஹர்சரண் சிங் கூறுகையில், ’’பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது’’ என தெரிவித்துள்ளார்.