யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மல்லாகம் கோட்டைகாடு புகையிரத கடவைக்கு அண்மையில் வைத்து காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் தபால் புகையிரத்தை வழிமறித்து இவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகையிரத கடவையில் சமீஞ்சை விளக்குகளும் சமீஞ்சை ஒலியும் பொருத்தப்பட்டுள்ள போதும் அதற்கான தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை.இதனால் காங்கேசன்துறை இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதுண்டு சண்முகம் சிவசங்கரன் என்ற நபர் உயிரிழந்ததாக தெரிவித்த மக்கள், புகையிரத கடவைக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அதற்கான காவலாளி நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த சுன்னாகம் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.இதனையடுத்து புகையிரதம் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ளும் வகையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டம் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவு தபால் புகையிரதம் அரை மணித்தியாலம் தாமதமாக சென்றுள்ளது.