மூட நம்பிக்கையால் சீனாவில் விமானத்தின் இன்ஜினில் சில்லரை நாணயங்களை பெண் ஒருவர் வீசி எறிந்த சம்பவத்தால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது.
அந்த விமானத்தில் 150 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். அந்த விமானத்தில் ஏறுவதற்காக 80 வயதான சீனப் பெண் ஒருவர் விரைந்து கொண்டிருந்தார். அப்போது அவர் விமானத்தின் என்ஜினை குறிவைத்து, சரமாரியாக நாணயங்களை வீசத்தொடங்கினார். இப்படி அவர் 9 நாணயங்களை வீசினார். அவற்றில் ஒரு நாணயம் என்ஜின்மீது மிகச்சரியாக விழுந்தது. இந்தப் பெண்ணின் செயல் மீது சந்தேகம் கொண்ட சகபயணி ஒருவர் விமான நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
தனது கணவர், மகள், மருமகன் ஆகியோருடன் செல்லவிருந்த அந்தப் பெண்ணை போலீசார் விசாரணைக்காக பிடித்துச்சென்றனர். அது மட்டுமல்ல, விமானத்தில் இருந்த 150 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். என்ஜினீயர் வரவழைக்கப்பட்டு விமானம் பரிசோதிக்கப்பட்டது. குறிப்பாக, விமானத்தின் என்ஜின் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சான்று அளிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும், தனது குடும்பத்தாரும் பத்திரமாக பயணம் செய்வதற்காகத்தான் விமானத்தின்மீது நாணயங்களை வீசியதாக தெரிவித்தார். அதாவது, அவர் இப்படி நாணயங்களை வீசி பிரார்த்தனை செய்தால் பயணம் பத்திரமாக அமையும் என்ற மூட நம்பிக்கையில் செய்துள்ளார். அந்தப் பெண், புத்த மதத்தைச் சேர்ந்த கியு என தகவல்கள் கூறுகின்றன.
கடைசியில் 5 மணி நேர தாமதத்துக்கு பின்னர் அந்த விமானம் புறப்பட்டு சென்றது. இதன்காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.