சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே 300 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்க திட்டம்

24863 0

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான 450 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான 450 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்களை இயக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும் ஜெர்மனி அரசுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஜெர்மனி அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆரம்பகட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள், பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஜெர்மனி அதிகாரிகள் குழு விரைவில் விரிவான ஆய்வு நடத்த இருக்கிறது. அந்த குழுவினர் தங்கள் ஆய்வறிக்கையை ஓர் ஆண்டுக்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்வார்கள்.
இந்த தகவலை ரெயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அதிவேக ரெயில் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெற இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.