கடந்த 35 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இளைஞர்களின் தொழில் இல்லா பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தேவையான உதவிகளை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லிபீயூஸ் சொக்குபோவா தெரிவித்தார்.
தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற் பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (28) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த சுமார் 300 இளைஞர் யுவதிகளுக்கான தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (என்.வி..கியு) இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தேசிய தொழிற் பயிற்சி அதிகாரசபை இதற்கான பயிற்சிகளை வழங்கிவந்தது.
தேசிய தொழில்நுட்பம், பாரவூர்தி சாரதி பயிற்சி, நவீன ஆடை வடிவமைப்பு பயிற்சி உட்பட 45 பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கே இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பி.நளீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லிபீயூஸ் சொக்குபோவா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலாங்கனி பெரேரா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சர்தேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்திரா துடவே, சர்தேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லிபீயூஸ் சொக்குபோவா,
வடகிழக்கில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையின் பின்னர் மாவட்டங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி திட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் முக்கியமாக இந்த தொழிற்பயிற்சி வழங்கப்பட்டதை கருதமுடியும். இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை ஒரு முக்கிய நிகழ்வாக நான்கருதுகின்றேன். இந்த பயிற்சிகள் மூலமாக இப்பகுதி இளைஞர் யுவதிகளின் வாழ்வினை உயர்த்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. சந்தைகளின் கேள்விகள் உள்ள பயிற்சி நெறிகள் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறான தொழிற்பயிற்சிகளை இளைஞர் யுவதிகளுக்கு வழங்கி வேலைவாய்ப்பு சந்தைக்கு கொண்டு செல்லும் செயற்றிட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து தமது உதவிகளை வழங்கும். தொழில் வாய்ப்புகள் திறமையில் தங்கியுள்ள விடயமாகவுள்ளது. திறமைகள் உள்ளவர்களுக்கு தொழில்களைப் பெற்றுக்கொள்வதற்கு எந்த தடைகளும் இருக்கப்போவதில்லை.
திறமைகள் இல்லாதவர்களும் அந்த திறமைகளைப் பெற்று ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.