தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் மருத்துவ சேர்க்கை

249 0

மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

2017-18-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை (27-ந் தேதி) முதல் வினியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவ கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரி உள்ளன. இது தவிர 10 சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் செயல்படுகின்றன. இந்த ஆண்டு நீட் தேர்வு முறை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா?

பிளஸ் 2 மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்களா? என்ற குழப்பம் நிலவி வந்தது.

பெற்றோர், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்துக்கு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சமீபத்தில் சட்டசபையில் விளக்கம் அளித்தார். நீட் தேர்வை எதிர்த்து தமிழக சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்காவிட்டால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலும் அதில் தாமதம் ஏற்பட்டால் தமிழ்நாடு உள் ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற தெரிவித்தார். இது குறித்து விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது:-

அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்பட்டது போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில கலந்தாய்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கிட்டு இடங்கள் 456 ஆகும். மீதமுள்ள 2594 இடங்கள் தற்போது வெளியிட்டுள்ள அரசாணைப்படி 85 சதவீத இடங்கள் தமிழக சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் கலந்தாய்வு தொடங்கும் நாள் வரை கிடைக்காவிட்டால் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 2094 இடங்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களையும் சேர்த்து 2203 இடங்களும் அடங்கும்.

மீதமுள்ள 15 சதவீத 391 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, பிற தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். சுயநிதி மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 கல்லூரிகளில் உள்ள 783 இடங்களில் 667 இடங்கள் மாநில வாரியத்தில் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 119 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.

இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் ஜூலை 7-ந் தேதி வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8-ந் தேதி மாலை 5- மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

Leave a comment