மத்திய, மாநில அரசுகள் கொசு வலைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கொசு வலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அமுல்படுத்துகிறது. இதன் முலம் பல்வேறு எலக்ட்ரிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மருந்து உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு 5 சதவீதத்தில் இருந்து 28 சதவீதம்வரை வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
சுகாதார துறை தொடர்புடைய கொசு வலை பொருட்களும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு தப்பவில்லை.
பைபர், அலுமினியம், மற்றும் ஸ்டீல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பாத்ரூம் ஜன்னல்களுக்கு பொருத்தக் கூடிய கொசுவலை, கதவு ஜன்னல்களுக்கு பொருத்தக் கூடிய கொசுவலைகளுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பின் மூலம் கொசுவலை தயாரிப்பு தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை- புதுவை மொத்த கொசுவலை விற்பனையாளர் வி.எம். ராஜூ வெங்கடேஷ் கூறுகையில், கொசுவலை தயாரிப்புகளுக்கு தமிழக அரசு இதுவரையிலும் வரி விலக்கு அளித்து வந்தது. தற்போது மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி சட்டத்தின் மூலம் கொசு வலைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
கொசுவலை பொருட்கள் சுகாதார துறையின் கீழ் வருவதால் தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி ஜி.எஸ்.டி. வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். கொசு வலைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஜிகா வைரஸ், மூளை காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க கொசு வலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. 18 சதவீத வரி விதிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கொசுவலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு கொசுக்களால் நோய் பரவும் அவலம் ஏற்படும். எனவே சட்டமன்ற கூட்டத் தொடரில் சுகாதார துறை மானிய கோரிக்கையின் போது கொசு வலைக்கான வரி விதிப்பை மத்திய அரசு பரிசீலனை செய்ய வலியுறுத்தி மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.