துபாய் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஓடுபாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னையில் இருந்து துபாய் செல்லும் மூன்று விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 300 பேருடன் சென்ற போயிங் 777 ரக எமிரேட்ஸ் விமானம் துபாயில் இறங்கியபோது தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விமானத்தில் பிடித்து இருந்த தீயை அணைக்கும் பணியை தொடங்கினர்.
இதற்கிடையே, விமானத்தின் நடுப்பகுதி மற்றும் வால்பகுதி எரிந்துவிட்டது. அவசர வழியின் (எமர்ஜன்சி சூட்) மூலம் பயணிகள் அனைவரும் விரைவாகவும். பத்திரமாகவும் வெளியேற்றப்பட்டனர்.
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையத்தில் இந்த விபத்து நேரிட்டதை தொடர்ந்து விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, துபாய் விமானநிலையம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “துபாய் சர்வதேச விமான நிலையத்தில் EK521 விமான விபத்து சம்பவம் நேரிட்டதை தொடர்ந்து, இதுதொடர்பாக அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் வரையில் விமான நிலையத்தில் அனைத்து செயல்பாடுகளும் (விமானம் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல்) இடைநிறுத்தம் செய்யப்படுகிறது.” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், விபத்து நடந்த ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் ஒரு ஓடுபாதை வழியாக மட்டும் விமான போக்குவரத்து நடைபெற்று வந்தது.
நேற்றுவரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து துபாய்க்கு வந்துநேரும் 200-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், சுமார் 25 ஆயிரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நேற்று மாலை ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது. எனினும், நேற்று முன்தினம் மற்றும் நேற்று அங்கிருந்து புறப்பட்டு செல்ல முடியாமல் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களும் இதேபோல் வரிசைக்கிரமமாக துபாய் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. அவ்வகையில், சென்னையில் இருந்து இன்று காலை துபாய்க்கு புறப்பட்டு செல்ல வேண்டிய மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.