கெயில் எரிவாயு திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

351 0

201608051013586307_Kanimozhi-MP-Emphasis-will-have-to-review-the-gail-gas-plan_SECVPFடெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவற்றை தேசிய எரிவாயு வழித்தடத்தில் இணைப்பதற்காக 2007-ம் ஆண்டு கொச்சி- குட்ட நாடு- மங்களூர்-பெங்களூர் எரிவாயு குழாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

2007-ல் ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது 2012-ல் தான். மூன்று மாநிலங்களில் 871 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறது இந்தத் திட்டம். இவற்றில் தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் 310 கிலோ மீட்டர்கள் இந்த திட்ட எல்லைக்குள் வருகின்றன. இந்த எரிவாயு குழாய் பதிப்புத் திட்டத்தால் தமிழ்நாட்டில் 146 கிராமங்களில், 2,430 விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க, எரிவாயுக் குழாய்களை நெடுஞ்சாலைகள் வழியாக கொண்டு செல்லுமாறு விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். நெடுஞ்சாலைகள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுவது புதிதல்ல, விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இதுவே தீர்வு.

மத்திய அரசும், இந்த திட்டத்தை செயல்படுத்தும் கெயில் நிறுவனமும்… நெடுஞ்சாலைகள் வழியாக குழாய்களைக் கொண்டு செல்வதால் திட்டத்தின் செலவு அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். மத்திய அரசைப் பார்த்து நான் கேட்கிறேன், இந்தத் திட்டத்தால் விளை நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதா?

கெயில் நிறுவனத்துக்கு எதிராக தமிழகத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் தொடுத்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில்… மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளோடு கலந்து ஆலோசனை செய்து இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய திசையில் செல்வதற்கான எந்த ஓர் அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.

எனவே கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு தமிழக விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்ற உறுதியைத் தரவேண்டும்.

அந்த வகையில் மத்திய அரசு தமிழகத்தில் விவசாயிகள் உட்பட பல தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு அதன் பிறகே இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைய வேண்டும்.இவ்வாறு கனிமொழி பேசினார்.