கொடைக்கானல் எம்.எம்.தெருவை சேர்ந்தவர் சரோஜினி. இவரது மகன் ராஜேஸ்வரன்(வயது16). மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி கட்டணம் செலுத்தாததால் தலைமை ஆசிரியை மங்கையர்கரசி, ராஜேஸ்வரனை கண்டித்துள்ளார்.
மேலும் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரன் வீடு திரும்பியதும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உறவினர்கள் அங்கு திரண்டு முற்றுகையிட்டனர்.
தலைமை ஆசிரியை மங்கையர்கரசியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோட்டாட்சியர் சுரேஷ், நகர்மன்ற தலைவர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து மங்கையர்கரசி மற்றும் மாணவனின் உறவினர்களை மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து பள்ளி தாளாளர் எரோனிமுஸ், மங்கையர்கரசியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாணவனின் தாயார் சரோஜினி கண்ணீர் மல்க கூறுகையில், எனது மகன் பள்ளியில் நடந்த விபரம் குறித்து அழுதபடி தெரிவித்தான். நான் அவனை தேற்றினேன். ஆனாலும் தலைமைஆசிரியை என்னை கண்டபடி திட்டினார் என்று தேம்பியபடி கூறினான்.
இதனால்தான் எனது மகன் தற்கொலை செய்துள்ளான். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்களுக்கு இதுபாடமாக அமையும். பெற்றோர்களும் இதனை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.