இலங்கை தௌவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அபகீர்த்தி வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.
புத்தபெருமான் தொடர்பில் அபகீர்த்தியான கருத்தை வெளியிட்டதாக அந்த அமைப்பின் 6 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசாரணையை மேற்கொண்டு வந்த கொழும்பு முதன்மை நீதிமன்ற நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய, சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை பௌத்த விவகார திணைக்களமே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தது.
வீடியோ மூலம் மேற்கொள்ளப்பட்ட பதிவு ஒன்றின்படி குறித்த அமைப்பு, நாட்டின் இன ஐக்கியத்தை பாதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தௌவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், 2013 ஏப்ரல் 13ஆம் திகதியன்று விடுத்த கருத்து ஒன்றில் புத்தபெருமான் மனித தசையை உண்டார் என்றும் மும்மணிகள் என்பது வெறுமனே கற்கள் என்றும் குறிப்பிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அடுத்த விசாரணை டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது