மூதூர் 17பேர் படுகொலை – நம்பிக்கையான விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் – பிரான்ஸ் தொண்டு நிறுவனம்

334 0

muttur-massacre-2-638x400திருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் தொண்டு நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
எக்சன் எகெய்ன்ட் ஹங்கர் என்று இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் வேரோனிக்கியு என்ரியின்ஸ்(Veronique Andrieux)  , இலங்கை வந்துள்ள நிலையில் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப்படுகொலைகள் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு பெண்கள் உட்பட்ட தமது பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இது 37 வருடக்கால போரில் மிகவும் மோசமான படுகொலையாக கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஏற்றுக்கொண்ட சர்வதேச பொறிமுறையின் ஊடான விசாரணை விடயங்களை உரியமுறையில் செயற்படுத்துகிறதா? என்பது தொடர்பில் தமது நிறுவனம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சர்வதேச பொறிமுறையின் ஊடாக தமது நிறுவனப்பணியாளர்களின் கொலைகள் தொடர்பான உண்மைகள் வெளியாகும் என்று தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் செயற்படவேண்டிய காலமாகும் என்றும் வேரோனிக்கியு என்ரியின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கொல்லப்பட்ட இந்த 17 பேர் தொடர்பில் கடந்த புதன்கிழமையன்று கொழும்பில் நினைவு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று திருகோணமலையில் அதேபோன்ற நிகழ்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக்கொலைகளை இலங்கை இராணுவமே செய்ததாக ஐக்கிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளபோதும் அதனை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.