கவிஞரும் தமிழாசிரியருமாகிய சாவகச்சேரியூர் த.நாகேஸ்வரன் எழுதிய இதயக்கனல் என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா தென்மராட்சி இலக்கிய அணியின் ஏற்பாட்டில் சங்கத்தானையில் உள்ள கம்பன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்க்கோட்டத்தில் நடைபெற்றது.
தென்மராட்சி இலக்கிய அணி அமைப்பாளர் அ.வாசுதேவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். தெ.திருவேரகன் கடவுள் வாழ்த்து இசைத்தார். திருக்கணித பதிப்பக முகாமையாளர் சமூகஜோதி கா. சிவஞானசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். ஆசியுரைகளை கம்பவாரிதி இ.ஜெயராஜ், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த கம்பன் கழக ஸ்தாபகத் தலைவர் திருநந்தகுமார் ஆகியோர் வழங்கினர்.
வாழ்த்துரைகளை வலம்புரி பத்திரிகை பிரதம ஆசிரியர் ந.விஜயசுந்தரம், பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன், பருத்தித்துறை பிரதேச செயலர் கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோர் வழங்கினர்.
நூலின் வெளியீட்டுரையை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் க.அருந்தவபாலன் ஆற்றினார்.
நயப்புரைகளை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன், பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் ஆற்றினர். நூலின் முதற்பிரதியை கம்பவாரிதி இ.ஜெயராஜ் வெளியிட்டு வைக்க சாவகச்சேரி முத்துமாரி அம்மன் ரேடர்ஸ் உரிமையாளர் கலாநிதி சின்னத்தம்பி சிவயோகனின் பிரதிநிதி பெற்றுக்கொண்டார். கௌரவப் பிரதிகளை பேராசிரியர் க.கந்தசாமி, குகன் ஸ்ரூடியோ உரிமையாளர் லயன் வ.ஸ்ரீPபிரகாஸ், கல்வயல் ஆயிலடி பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த வி.மயூரன், சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்ற தலைவர் ந.சிவபாலன், தென்மராட்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சிவ. முகுந்தன் சார்பில் அவரது மாமனார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் தமிழக அரசினால் கம்பன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட கம்பவாரிதி. இ.ஜெயராஜிற்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. கம்பவாரிதி இ.ஜெயராஜ் தனது உரையின் போது கவிஞர் த.நாகேஸ்வரன் இனிமேல் நற்றமிழ் வேந்தன் நாகேஸ்வரன் என அழைக்கப்பட வேண்டும் என கௌரவப் பட்டம் வழங்கி வைத்தார்.