பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீளப் பெறப்பட்டுள்ளது.
தன்னைக் கைதுசெய்ய தயாராகி வருவதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையிலான உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி, ஞானசார தேரர், தனது சட்டத்தரணி ஊடாக இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இன்று குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, முறைப்பாட்டாளரான தேரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த வழக்கை தொடர்ந்தும் நடத்த வேண்டிய தேவை இல்லை எனக் குறிப்பிட்டார்.
எனவே இதனை மீளப் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்குமாறு அவர் கோரினார். விடயங்களை கருத்தில் கொண்ட நீதவான்கள், மனுவை மீளப் பெற அனுமதித்ததோடு, பின்னர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் நீதிமன்றத்தில் சரணடைந்த ஞானசார தேரர், பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும், சில மணி நேரங்களிலேயே பிறிதொரு குற்றச்சாட்டு தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு மீண்டும் பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.