ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சேவையாற்றிய நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என, நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் இது குறித்து இன்று கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் தெரியப்படுத்தியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாமல் ராஜபக்ஷவின் பெயரில் அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க வங்கிகள் சிலவற்றிலுள்ள கணக்குகள் குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், இதுவரை அது கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு அதிகாரிகள் இதன்போது நீதிமன்றத்திடம் கோரினர்.
விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, எதிர்வரும் நவம்பர் 11ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.