நெடுந்தீவைப் பாதுகாக்க தடுப்பு அணை விரைவில் பிரதேச மக்களின் கோரிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை
நெடுந்தீவுக் கடற்கரையைக் கடலரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு கடற்கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் தடுப்பு அணை கட்டப்படும் என்று மாவட்டசெயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுந்தீவு பிரதேசத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அதில் இந்தப் பிரச்சினை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்,
நெடுந்தீவு பிரதேசம் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பிரதேசம். எமது பிரதேசத்தை கடலரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான திட்டங்களோ அல்லது அதற்கான ஏற்பாடுகளோ இதுவரையில்லை. அதனால் எமது பிரதேசம் கடலரிப்புக்குள்ளாகி எமது தீவின் நிலப்பகுதி படிப்படியாகக் கடலுக்குள் போய்க்கொண்டிருக்கின்றது.
இதற்குத் தீர்வு காணாதுவிட்டால் எமது நாட்டுக்கு அயல்நாடான இந்தியாவில் அத்துப்பட்டி என்ற கிராமம் வரைபடத்தில் இருந்து காணாமல் போனதுபோல எமது நாட்டில் நெடுந்தீவு பிரதேசம் என்ற ஒன்றே இல்லாது போய்விடுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
1965 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்ட சூறாவளியின் போது நெடுந்தீவின் ஒரு பகுதி மிக மோசமாக அரிக்கப்பட்டு சிறுபகுதி நீருக்குள் போய்விட்டது. இனிவரும் காலங்களிலும் இவ்வாறான இடர் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் எமது பகுதி மேலும் சடுதியாக மூழ்கும் அபாயம் உள்ளது.
இதனை உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எமது தீவு அழிவடையாது பாதுகாத்துத் தருமாறு கேட்கின்றோம்” என்றனர்.
இதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலக அதிகாரிகள், “நெடுந்தீவு பிரதேசத்தின் கரையோரப்பகுதிகள் கடலரிப்புக்குள்ளாவது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
நாம் கடற்கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான தீர்வினை வழங்குவது தொடர்பில் ஆலோசிப்போம். நாமும் குறித்த திணைக்களமும் இணைந்து நெடுந்தீவில் கடல் தடுப்பு அணைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றனர்.